- November 26, 2022
28,840 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில், 28 ஆயிரத்து,
840 இளைஞர்களுக்கு, தொழில் பிரிவுகளில் திறன் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்த, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,
சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், தீன் தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இதன்படி, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள், நிலையான மாத வருமானம் ஈட்டும் வகையில், 120க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி அளித்து, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். உணவு, தங்குமிடம், சீருடை, பயிற்சி உபகரணங்கள்,
திறன் குழுமம் பயிற்சியும் வழங்கப்படும்.
விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு, அயல்நாடுகளிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. இப்பயிற்சியை அளிக்க, அனைத்து மாவட்டங்களிலும், 130 பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.
நடப்பாண்டில், 28 ஆயிரத்து, 840 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள், மாவட்டங்களில் உள்ள, மாநில ஊரக வாழ்வாதார இயக்கக அலுவலகம் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை அணுகலாம்.
மேலும், 155330 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
- November 26, 2022
பட்டப்படிப்பில் தமிழ், ஆங்கிலம் கட்டாயம்: உயர்கல்வி அமைச்சர்
சென்னை: அனைத்து பல்கலைகளின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளின் பட்டப் படிப்புகளில், அடுத்த ஆண்டு முதல் தமிழ், ஆங்கிலம் கட்டாய பாடமாக இடம் பெறும் வகையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது, என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துஉள்ளார்.
பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து, தமிழ்நாடு உயர்கல்வி மன்ற அலுவலகத்தில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
பின், உயர் கல்வி அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:
மாணவர்கள் வேலை பெறுவோராக மட்டுமின்றி,
வேலை தருவோராக மாறும் வகையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பெரிய மாற்றங்கள்
கணிதம், இயற்பியல் பாடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பாடப் பிரிவுகளில், கணினி அறிவியல் பாடத்தையும் இணைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதற்கான புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாராகி உள்ளது. இந்த வரைவு அறிக்கை, பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவற்றை துணைவேந்தர்கள் ஆய்வு செய்து, கருத்துகளை வழங்குவர்.
அடுத்த ஆண்டில் இருந்து, தமிழக அரசின் கீழ் செயல்படும், அனைத்து பல்கலைகளின் பாடத்திட்டத்திலும் பெரிய மாற்றங்கள் இருக்கும்.
திருத்தம்
பட்டப் படிப்புகளில், நான்கு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ், ஆங்கில பாடம் கட்டாயம் இடம் பெறும். இந்த மொழி பாடத்திட்டம் மட்டும், அனைத்து பல்கலைகளுக்கும் பொதுவானதாக இருக்கும்.
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பணி நியமனங்களில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, பணி நியமன சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். பல்கலைகளில் ஆராய்ச்சிகளுக்காக, ஏற்கனவே 50 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டு உள்ளது.
அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்ட தலைவர்களின் பெயரில், ஒவ்வொரு பல்கலையிலும் அறக்கட்டளைகள் துவங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அந்த அறக்கட்டளை சார்பில், சம்பந்தப்பட்ட தலைவர்களின் பெயரில் டிப்ளமா படிப்புகளை, சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகள் சார்பில் நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.