28,840 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில், 28 ஆயிரத்து,
840 இளைஞர்களுக்கு, தொழில் பிரிவுகளில் திறன் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்த, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,
சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், தீன் தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இதன்படி, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள், நிலையான மாத வருமானம் ஈட்டும் வகையில், 120க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி அளித்து, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். உணவு, தங்குமிடம், சீருடை, பயிற்சி உபகரணங்கள்,
திறன் குழுமம் பயிற்சியும் வழங்கப்படும்.
விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு, அயல்நாடுகளிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. இப்பயிற்சியை அளிக்க, அனைத்து மாவட்டங்களிலும், 130 பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.
நடப்பாண்டில், 28 ஆயிரத்து, 840 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள், மாவட்டங்களில் உள்ள, மாநில ஊரக வாழ்வாதார இயக்கக அலுவலகம் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை அணுகலாம்.
மேலும், 155330 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.